மக்களுக்கு அடுத்த ஷாக்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.63 ஆயிரத்தை தாண்டியது..!

தங்கம் விலை வரலாறு காணாத அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள் இனி தங்கத்தை கனவில் தான் வாங்க முடியுமோ? என எண்ணும் அளவிற்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த மாதம் 31 ஆம் தேதி ரூ.61 ஆயிரத்தையும் தாண்டியது. அதன் தொடர்ச்சியாக மறுநாளே ரூ.62 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. இடையிடையே சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் கூட விலை கூடுவதே அதிகமாக உள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் பவுனுக்கு ரூ.680 குறைந்து இருந்தது. இதனால் நகை பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதாவது நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.61 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 840 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூபாய் 105 உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,810க்கும், சவரன் ரூ.62,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 107க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 95 ரூபாய் உயர்ந்து 7905 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.