அடுத்த அதிர்ச்சி.. கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து!
சீனாவில் உருவான கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது.
இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 90 சதவீதம் பேர், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி அல்லது ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிதான நிலையில் ரத்த உறைதல், ரத்த சிவப்பணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் அஸ்ட்ராஜெனகா அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பாதகமான பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வுக்குழுவின் ஆய்வறிக்கை, ஸ்பிரிங்கர் நேச்சர் எனும் மருத்துவ இதழில் வெளியாகி பீதியை கிளப்பி உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 926 பேரை ஆய்வுக்குழுவினர் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அவர்களை தொடர்ந்து ஓராண்டு (2022-2023) கண்காணித்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதில் 926 பேரில் சுமார் 50 சதவீதம் பேர் சுவாசக்குழாய் நோய்தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பக்கவாதம், செல் நரம்புகளை பாதித்து உடலை பலவீனமாக்கும் குய்லின் பாரே சிண்ட்ரோம் பாதிப்புக்கு சுமார் 1 சதவீதத்தினர் ஆளாகி உள்ளனர். ஆய்வில் இடம் பெற்றவர்களில் 635 பேர் இளம்பருவத்தினர். இவர்களில் 10.5 சதவீதம் பேர் தோல் அலர்ஜி பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், 10.2 சதவீதம் பேர் பொதுவான உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், 4.7 சதவீதம் பேர் நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெண்களில் 4.6 சதவீதம் பேர் மாதவிடாயில் அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், 2.7 சதவீதம் பேருக்கு கண் பாதிப்புகளும், 0.6 சதவீதம் பேருக்கு ஹைப்போ தைராய்டு பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் இடம் பெற்றவர்களில் 3 பெண், 1 ஆண் உட்பட 4 பேர் இறந்துள்ளனர். இந்த ஆய்வில் சுமார் 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசிக்கு பிந்தைய அரிதான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு விளக்குகிறது.