அடுத்த அதிர்ச்சி...! தற்காப்பு பயிற்சியாளர் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்!
தலைநகர் டெல்லி அருகே உள்ள சுல்தான்புரி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் தற்காப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புக்கள் அனைத்தும் தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக நடத்தப்பட்டு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று தற்காப்பு பயிற்சி வகுப்பில் 45 வயதான சதீஷ் என்னும் பயிற்சியாளர் சதீஷ் 11 வயது மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்த மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஷை கைது செய்தனர். அவர் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்ல என்றும், தற்காப்பு பயிற்சி வழங்குவதற்காக தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது எனவும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.