1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த அதிர்ச்சி..! சிறுமியை கடித்த நாய்களுக்கு வளர்ப்பு உரிமம் பெறவில்லை..!

1

சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளி பணியாற்றி வருபவர் ரகு. இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்‌ஷாவுடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். இந்நிலையில், பூங்காவில் சோனியாவும், மகள் சுதக் ஷாவும் மட்டும் நேற்று இருந்தனர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் புகழேந்தி என்பவர் அழைத்து வந்த இரண்டு நாய்களும், சிறுமி சுதக் ஷாவை கடுமையாக கடித்துள்ளது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் சோனியா, நாய்களிடம் இருந்து சிறுமியை போராடி மீட்டு, சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவருடைய மனைவி மற்றும் மகன் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாடு, நாய் போன்ற விலங்குகளால் குழந்தைகள், முதியவர்கள் தாக்கப்படுவது அடிக்கடி சென்னையில் நடந்து வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

“இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்குப் பின்னர் கால்நடைத்துறையுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை எனக்கேட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். அவற்றுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது” என்றார்.


 

Trending News

Latest News

You May Like