மீசைத் தமிழர் வா.மு.சேதுராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தியால் நெஞ்சம் ஒருகணம் நின்று துடித்தது - வைரமுத்து..!

வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
மீசைத் தமிழர் என்று ஆசைத் தமிழர்களால் அழைக்கப்பட்ட பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தியால் நெஞ்சம் ஒருகணம் நின்று துடித்தது. தன் மொத்த வாழ்க்கையை முத்தமிழுக்கே காணிக்கையாக்கிய மாணிக்கத் தமிழர் வா.மு.சேதுராமன்.
எண்ணம் சொல் செயல் யாவிலும் தனித்தமிழையே தாங்கிப்பிடித்தவர். தமிழுக்காக நடைப்பயணம் சென்று சென்று கால்கள் தேய்ந்தாலும் கொள்கை தேயாத கோமான். அவரது தமிழ்ப்பணி இதழ் என் தொடக்ககாலக்
கவிதைகளை வெளியிட்டு வெளிச்சம் தந்தது என்பதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். வளையாத முதுகெலும்பும் நிலையான கொள்கையும் சலியாத உழைப்பும் சரியாத தமிழ்ப் பற்றும்கொண்ட பாவேந்தர் மரபின் நல்லதொரு பெருங்கவிஞன் நம்மைவிட்டு நீங்கிவிட்டார் என்று பாரதிதாசன் கவிதா மண்டலமே கண்ணீர் வடிக்கும்.
தமிழூட்டி வளர்த்த அவர் பிள்ளைகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல். ஒரு வெற்றிடம் உண்டாகிவிட்டது வா.மு.சேதுராமனின் தோற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஈடு கொடுக்கும் இன்னொரு கவிஞன் இங்கு இல்லை. போய்வாரும் கவிஞரே, எங்களோடு உங்கள் தமிழ் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.