ஆயுத பூஜையன்று சாமி புகைப்படமோ, சிலையோ வைக்க கூடாது என உலா வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது - மருத்துவமனை டீன்..!

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பண்டிகைகள் இன்னும் இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ளன. ஆண்டு தோறும் ஆயுத பூஜையன்று தங்களின் தொழில் சார்ந்த பொருட்களையும், சரஸ்வதி பூஜையன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் சாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபடுவது வழக்கம்.
இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், ஆயுதப் பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தன்று எந்தவொரு மதத்தைச் சேர்ந்த சாமி புகைப்படங்களையோ, சிலை வடிவிலான பொருட்களையோ வைத்திருக்கக் கூடாது எனவும் அவ்வாறு ஏதேனும் வைக்கப்பட்டிருந்தால், எதிர்காலப் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ, சிலையோ வைக்கக் கூடாது என கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியதாக சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது. அதுபோன்ற சுற்றறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.