வந்தது புதிய ஏற்பாடு..! பள்ளிகளில் இனிமே ஒவ்வொரு வாரமும்...
நூலகங்கள் சென்று புத்தகங்கள் வாசிப்பது என்பது வகுப்பறை கற்றலிலும் ஈடுபாட்டை அதிகரிக்கும். இது தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும். இதையொட்டி தான் கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித்துறை முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், அனைத்து பள்ளிகளிலும் நூலகங்கள் இருக்க வேண்டும். படிப்பதற்கு என பிரத்யேகமாக ஓர் இடம் தேவை. இதை ஏற்படுத்தி தருவது பள்ளி நிர்வாகத்தின் கடமை. இதற்காக அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனை பயன்படுத்தி நூலக கட்டமைப்பை பராமரிக்க வேண்டும். இந்த நூலகங்களில் வரலாறு, நாவல், இலக்கியம், நாடகங்கள், காமிக்ஸ், பல்துறைகள், எதிர்கால வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான நூல்கள் இடம்பெற வேண்டும்.
இந்த புத்தகங்கள் அனைத்தையும் பள்ளிக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களை தாண்டி இலக்கியங்களை படித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வாரத்தில் ஒரு பாடவேளை நூலகத்திற்கு என ஒதுக்க வேண்டும். அது எந்த பாடப்பிரிவு, எப்படி கையாள்வது உள்ளிட்டவை தொடர்பாக பிரத்யேக வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ரேடியோ வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக இனி ஒரு மணி நேரம் நூலக வகுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.