கோடிக்கணக்கான மக்களை பசி என்ற கோரப்பிடியில் இருந்து மோடி அரசு மீட்டுள்ளது - அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, "பிரதமர் மோடி உலகம் முழுவதும் எங்கே சென்றாலும் பாரத அன்னையின் பெருமையை பறைசாற்றுகிறார். ஐநா சபையில் இருந்து அமெரிக்க அதிபரில் இருந்து புதிய இந்தியாவை பார்க்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனிக்கின்றனர். கோடிக்கணக்கான மக்களை பசி என்ற கோரப்பிடியில் இருந்து மோடி அரசு மீட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு வீடு கட்டிக்கொடுத்துள்ளது.
பிரதமர் மோடி ஒரு சாமானியன். தற்போது இந்தியாவில் சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. குஜராத்தில் இருந்துவந்த ஒரு சாமானியன் இந்த 9 ஆண்டுகளில் இந்திய மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். இந்த தருணத்தில் நாம் கேட்க வேண்டியது இதுதான். பாரத தாய் விழித்துஎழுந்திருக்கிறார். ஆனால் தமிழ் தாய் விழித்துஎழுந்துவிட்டாளா என்பதுதான் தற்போதைய கேள்வி.
தமிழ் இனத்துக்கு, தமிழ் கலாச்சாரத்துக்கு உண்மையான மரியாதை இருக்கிறதா?, ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறதா? ஒரு சாமானியன் இந்த அரசில் பங்கேற்க முடியும் என்ற நிலைமை தமிழகத்தில் உள்ளதா என்றால் இல்லை. தமிழகத்தில் நடக்கும் அரசு என்பது ஒரு குடும்பம் சார்ந்து அவர்களுக்காக கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு அரசு இயந்திரம் செயல்படுகிறது.
இந்த யாத்திரை என்பது அண்ணாமலையின் யாத்திரை கிடையாது. பாஜகவின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற இருக்கும் யாத்திரை.
மோடி அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் தாண்டி பிரதமர் மோடி தமிழர்களை நேசிக்கிற மனிதர். இந்தியாவிலேயே வேறு எந்த பிரதமரும் தமிழர்களின் புகழையும் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி அளவுக்கு உயர்த்தி பிடித்தது கிடையாது. ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியால் கிடைத்துள்ளது.
ஐநா சபையில் இருந்து உலகம் முழுவதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஆரம்பித்து, திருக்குறளை உலகறிய செய்து தமிழை பெருமைப்படுத்தியுள்ளார் பிரதமர். திருக்குறை நூறு மொழிகளில் மொழிபெயர்க்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை திருக்குறள் 23 மொழிகளில் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் அதை மொழிபெயர்க்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. ஆனால் இங்குள்ளவர்களுக்கு திருக்குறளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய என்ற எண்ணம் இல்லை.
அதனால் தான் 'என் மண், என் மக்கள்' என்ற யாத்திரை ஒரு வேள்வி யாத்திரையாக நமக்கு தேவைப்படுகிறது. அடுத்த 168 நாட்கள் அனைத்து இடத்துக்கும் செல்வோம். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு வழங்க இருக்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் I.N.D.I.A. என்ற பெயரில் ஒரு கூட்டணி இருக்கிறது. அந்தக் கூட்டணிக்கு திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன் கிழமை கேசிஆர் பிரதமர், வியாழக்கிழமை தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை இன்னொருவர் புதிதாக சேருபவர் பிரதமராக வருவார். ராகுல் காந்தி பெயரை ஏன் சொல்லவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ராகுல் காந்தி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர். ஏனென்றால் அன்றுதான் அரசுக்கு விடுமுறை. சனி, ஞாயிற்றுக் கிழமைக்கு பிரதமராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை கொண்டு வந்து I.N.D.I.A. கூட்டணி என்கிறார்கள்.
இந்தியாவை தன்னுடைய மூச்சாக, தன்னுடைய டிஎன்ஏவாக, தன்னுடைய கருவாக, தன்னுடைய ரத்தமாக, தன்னுடைய சதையாக, தன்னுடைய எலும்பாக வைத்துக்கொண்டு 10 ஆண்டுகளாக வேலை செய்துகொண்டிருக்கும் பிரதமர் மோடி மறுபடியும் மீண்டும் ஐந்தாண்டுகள் பிரதமராக வரவேண்டும்.
மூன்றாவது முறையாக பிரதமராக வரும்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதை நாமும் பார்க்கத்தான் போகிறோம். என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்த உள்ளோம்" என்று பேசினார்.