1. Home
  2. தமிழ்நாடு

மக்களவையில் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி போலீசாரிடம் சரண்..!

1

பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3 தினங்களுக்கு முன் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். பாதுகாப்பு அதிகம் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் கொல்கத்தாவை சேர்ந்த லலித் ஜா. பாராளுமன்றத்திற்குள் பாதுகாப்பு விதிமுறையை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லலித் ஜா, தலைமறைவானார்.

அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர். இந்த நிலையில், டெல்லி போலீசாரிடம் லலித் ஜா சரண் அடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து முறைப்படி கைது செய்யப்பட்ட லலித் ஜா, டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

2 துணை காவல் ஆணையர்கள் மற்றும் கூடுதல் காவல் ஆணையர்கள் உட்பட மூத்த காவல் துறை அதிகாரிகள், லலித் ஜாவிடம் விசாரணை நடத்தினர், அப்போது, பாராளுமன்ற தாக்குதலுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஒரு நுழைவு அனுமதி அவசியம்; எனவே, அது கிடைக்காததால் எளிதாக பாராளுமன்றத்திற்குள் நுழையக்கூடிய வகையில் அனுமதி சீட்டை ஏற்பாடு செய்துதரக்கூடிய அனைவரையும் அனுகி லலித் கேட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், ராஜஸ்தானில் உள்ள ஹோட்டலில் இருந்து லலித், செய்தி சேனல்கள் மூலம் நடந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் போலீஸ் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

பாராளுமன்றத்தில் காலிணிகள் சோதிக்கப்படுவதில்லை என்பதை தெரிந்துகொண்டதும், பாராளுமன்றத்திற்குள் புகைக் குப்பியை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக லக்னோவில் சிறப்பு வடிவமைப்பிலான இரண்டு ஜோடி காலணிகள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின்படி, இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை சேகரிப்பதற்காக, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீசார் லக்னோ, மைசூர், கர்நாடகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் உள்ள குற்றவாளிகளுடன் தொடர்புடைய இடங்களுக்குச் செல்வதற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, இவா்களுக்கு உதவியதாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது, ராஜஸ்தானில் வசிக்கும் மகேஷ் மற்றும் கைலாஷ் என இரண்டு பேரை டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இவர்கள் 'பகத்சிங் ஃபேன் கிளப்' என்ற சமூக ஊடக குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மகேஷ், தில்லியில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா தில்லியில் இருந்து ராஜஸ்தான் சென்றடைந்த பிறகு, அவரது கூட்டாளிகளின் மொபைல் போன்களை எரிக்க மகேஷ் உதவியுள்ளதும், மகேஷ் தாக்குதல் குழுவில் இடம்பெறப் போகிறார் என்பது தெரிய வந்ததும் சில காரணங்களால் அவர் குடும்ப உறுப்பினர்களால் அவர் தடுக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like