1. Home
  2. தமிழ்நாடு

வெறுங்கையுடன் சிறுத்தையிடம் போராடி குழந்தையை மீட்ட சிங்கப்பெண்..!!

வெறுங்கையுடன் சிறுத்தையிடம் போராடி குழந்தையை மீட்ட சிங்கப்பெண்..!!


மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் அருகே இருக்கும் கிராமத்தில் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

பூங்காவின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் பாடி ஜிரியா கிராமத்தில் வசித்து வருபவர் கிரண் பாய்கா. அவர் பாய்கா பழங்குடியினத்தை சார்ந்தவர். சம்பவம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணியளவில் தன் கணவரின் வருகைக்காக வீட்டின் வெளியே தன் 4 குழந்தைகளுடன் அவர் காத்திருந்துள்ளார். ஆனால், சிறுத்தையின் நடமாட்டத்தை அவர் கவனிக்கவில்லை. அவருடைய கைக்குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டும், அவருடைய ஆறு வயது மகன் ராகுல் மற்றும் இரு குழந்தைகளும் அவர் அருகே அமர்ந்திருந்தனர். தூரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ராகுலை தாக்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளது.

சமயம் பார்த்து ஒரே பாய்ச்சலில் ராகுல் மீது பாய்ந்து அவனை பற்றிக்கொண்டு ஓடியது. இதை சற்றும் எதிர்பார்க்காத கிரண் சுதாரித்துக் கொண்டு தன் மடியில் இருந்த கைக்குழந்தையை மற்றொரு குழந்தையிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அனைவரையும் வீட்டினுள் செல்ல பணித்துள்ளார். விரைந்து செயல்பட்ட அவர் உடனே சிறுத்தையை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார்.

இருள் சூழத்தொடங்கிய போதிலும், புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை அவர் அடையாளம் கண்டுகொண்டார். அதன் கால்கள் ராகுல் மீது இருந்துள்ளன. இந்த காட்சியை கண்ட கிரண் சிறுத்தையை நோக்கி பாய்ந்துள்ளார். அவருடைய முழு பலத்தையும் பிரயோகித்து குழந்தையை சிறுத்தையின் பிடியில் இருந்து மீட்டுள்ளார். பின் குழந்தையை கையில் ஏந்தியவாறு அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் சிறுத்தை மீண்டும் அவரை தாக்கியுள்ளது. அவர் சிறுத்தையின் பாதங்களை பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். அந்நேரம் கிராமவாசிகளும் விரைந்து வந்ததால் சிறுத்தை காட்டுக்குள் மறைந்து ஓடி விட்டது.

மயக்கமடைந்த நிலையில் இருந்த வீரத்தாய் கிரணையும் குழந்தையையும் கிராம மக்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் இதே போன்ற சம்பவம், சஞ்சய் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருவதால் அப்பகுதியை சுற்றி வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like