ஜனவரி 31 தான் கடைசி நாள்...! இந்த வேலையை முடிக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு...
ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் குடும்ப அட்டையாகும். ஒவ்வொரு மாநிலத்தில் ரேஷன் பயனாளிகளுக்கு அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்ற உணவு தானியங்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன. நிதியுதவிகளும் இதன் மூலம் வழங்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு அதிகாரிகள் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.ரேஷன் கார்டுகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை ஜனவரி 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இம்மாத இறுதிக்குள் இந்த செயல்முறையை முடிக்க வேண்டும். அருகில் உள்ள ரேஷன் டீலரிடம் பாயிண்ட் ஆஃப் சேல் எந்திரம் மூலம் கைரேகை பதிவு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பாயிண்ட் ஆஃப் சேல் எந்திரத்தில் கைரேகையை பதிக்க வேண்டும். கைரேகை பதிந்தவுடன் ரேஷன் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணும் காட்டப்படும். அதன் பிறகு கேஒய்சி சரிபார்ப்பு நிறைவடையும்.அந்த எந்திரத்தில் பச்சை குறியீடு வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் சிவப்பு குறியீடு வந்தால் பயனரின் ரேஷன் கார்டு ஆதார் கார்டுடன் இணையவில்லை என்று நிராகரிப்பு செய்யப்படும். அதன்படி ரேஷன் கார்டில் இருந்து அந்த நபருக்கான பொருட்களின் அளவு நீக்கப்படும். எனவே இந்த செயல்முறைக்கு ஆதார் அப்டேட் கட்டாயமாகும்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் இந்த வேலையை உடனடியாக முடிக்கவில்லை என்றால் அவர்களின் இ-கேஒய்சி நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகும். மேலும், அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.