வந்தாச்சு ஜியோ ஆப்! இனி கடன் முதல் முதலீடு வரை அனைத்து சேவைகளையும்..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ ஃபைனான்ஸ் என்ற கட்டண செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் ஜியோ பைனான்ஸ் செயலி தற்போது பிளே ஸ்டோர் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் வாயிலாக கடன் வாங்குவது, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது, வீட்டு கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து வகையான நிதி சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி ஜியோ டிஜிட்டல் முறையில் சேமிப்பு கணக்கையும் பைனான்ஸ் செயலி வாயிலாக துவங்க முடியும். பயோமெட்ரிக் அடையாள சரி பார்ப்பு, டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றையும் இதன்மூலமாக பெறலாம் என கூறப்படுகிறது. யுபிஐ பேமென்ட், மொபைல் ரீசார்ஜ் மற்றும் பிற கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட அனைத்து நிதி சார்ந்த சேவைகளையும் ஜியோ ஃபைனான்ஸ் செயலி மூலமாக செய்ய முடியும்.
ஜியோ ஃபைனான்ஸை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் மூலமாக பல வங்கிச் சேவைகளை எளிதாக பெறலாம். பல்வேறு விதமான வங்கி சார்ந்த தகவல்களை இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் 24 காப்பீடு திட்டங்களையும் ஜியோ பைனான்ஸ் செயலி மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடுகளை டிஜிட்டல் முறையிலேயே இந்த ஆப் மூலமாக பெறலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலே இந்த செயலி உருவாகப்பட்டுள்ளது என ஜியோ பைனான்ஸின் தலைமை செயல் அதிகாரியான ஹித்தேஷ் சேத்தியா தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கையான நிதி செயலியாக இது இருக்கும் எனவும் கூறியுள்ளார்.