நாட்டையே உலுக்கிய சம்பவம் : இளைஞரின் காலை கழுவிய முதலமைச்சர்..!
மத்தியப் பிரதேசத்தில் முழுவதும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் ஒரு நபர் அமர்ந்திருக்க அவர் மீது இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞர் என்பதும் மனிதாபிமானமற்ற அந்தச் செயலைச் செய்தவர் பிரவேஷ் சுக்லா என்ற நபர் என்பதும் அடையாளம் தெரியவந்தது. சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்து தற்போதுதான் அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல் நாத், "சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ பரவி வருகிறது. ஒரு பண்பட்ட சமூகத்தில் பழங்குடியின இளைஞர் மீதான இத்தகைய கொடூரமான செயலை நிறைவேற்ற இடமில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேச மாநிலத்தையும் தலைகுனியச் செய்துள்ளது. இந்தக் கொடுமையைச் செய்தவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி மக்கள் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரவேஷ் சுக்லா என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். வீடியோ வைரலாகி பிரச்சினையான நிலையில் சுக்லா தலைமறைவானதாகவும் அவரைப் பல்வேறு இடங்களிலும் தேடி அதிகாலை 2 மணியளவில் கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவமதிக்கப்பட்ட இளைஞர் தஷ்மத் ராவத்தை தனது இல்லத்துக்கு அழைத்து அவரது காலைக் கழுவினார் மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான்.
"வீடியோவை பார்த்தபோது எனக்கு வலித்தது. உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் போன்றவர்கள் எனக்கு கடவுளைப் போன்றவர்கள்" என்று அப்போது தஷ்மத் ராவத்திடம் முதலமைச்சர் கூறியதாக ஏஎன்ஐ குறிப்பிட்டுள்ளது.