கொடூரத்தின் உச்சம்..! மாதுளம் பழம் பறித்த சிறுவர்கள் காலில் சூடு வைத்த வீட்டு உரிமையாளர்..!
கன்னியாகுமரி அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஷைஜி. இவருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் இருவரும் அதேபகுதியை சேர்ந்த கலா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து மாதுளம் பழம் பறித்தாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் கலா, சிறுவர்கள் இருவரையும் வீட்டிற்குள் கட்டி வைத்து காலில் சூடு வைத்தாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாத சிறுவர்கள் 2 பேரும் வீட்டில் கூறினால் தாயார் அடிப்பார் என்று கருதி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக பொய் கூறினர்.
காயம் பெரிதாக இருந்ததால் சிறுவர்களின் தாயார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு காயத்தை பரிசோதித்த மருத்துவர் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறினார். தொடர்ந்து தாயார் சிறுவர்களிடம் துருவி துருவி கேட்டபோது அவர்கள் நடந்த சம்பவத்தை கூறி அழுதனர்.
இதுகுறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே புகாரை வாபஸ் பெற மிரட்டி வருவதாகவும், சிறுவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.