ஆளுநருக்கு தமிழகம் அமைதியாக இருப்பது பிடிக்கவில்லை - முதல்வர் ஸ்டாலின்..!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது.,
ஆர்.என்.ரவி கவர்னராக வந்தது முதல் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகி விட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக கவர்னர் ரவி விடுத்த அறிக்கையானது, கவர்னர் ரவியின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும். ஒரு அமைச்சரை நியமிப்பதும் அந்த அமைச்சரை நீக்குவதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர - வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.
ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரைத் தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் கவர்னருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார் கவர்னர். தமிழகம் வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.
தொழில் துறையைப் போலவே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் மீண்டெழுந்துள்ளது. இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது. தமிழகத்தில், சுமார் 50 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மிக மோசமான நிதி நெருக்கடி காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோமே தவிர, அதனைக் காரணமாகக் காட்டி எதையும் செய்யாமல் இருந்தது இல்லை. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கப் போகிறோம். ஒரு கோடி பெண்கள், மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை பெறப் போகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.