ரேடாரை குறைசொல்லும் லட்சணத்தில் இருக்கிறது அரசு.. பிரேமலதா விஜயகாந்த விளாசல்..!

“மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடாரை குறை சொல்லும் லட்சணத்தில் இருக்கிறது அரசாங்கம்” என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா ஆகியோர் தொண்டர்களை சந்தித்தனர். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் கை அசைத்தார். மேலும், தன்னை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு 100 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “2022ல் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு விட்டோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘கோ பேக் மோடி’ என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், மத்திய அரசின் தயவு திமுகவுக்கு தேவைப்படுகிறது.
தேமுதிகவின் செயல் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து தொண்டர்களும், விஜயகாந்தும் முடிவு செய்வார்கள். 2026ல் தனி அணி அமைப்போம் என்பது பாமகவின் உட்கட்சி முடிவு. 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேமுதிக அப்போது முடிவு செய்யும்.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடாரை குறை சொல்லும் லட்சணத்தில் அரசாங்கம் இருக்கிறது. நீட், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதியை முறையாக நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களுக்கு இருக்கிறது. திமுக ஆட்சியிலும் நீட் மரணம் தொடரவே செய்கிறது” எனத் தெரிவித்தார்.