இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது..!

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில், ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் மீன்பிடி தடைக்காலம் இந்த ஆண்டு இன்று ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 3,080 விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்படும். 1.45 லட்சம் மீனவர்கள் 61 நாட்களுக்கு தொழிலின்றி வீடுகளில் முடங்க நேரிடும்.
தடைக் காலத்திற்கான அறிவிப்பை முன்னிட்டு, தற்போது கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற விசைப் படகுகள், இன்று நள்ளிரவுக்குள் தங்குதள துறைமுகங்களுக்கு திரும்பி வரவேண்டும் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் பகுதிகளில் 750 விசைப் படகுகள் உள்ளன. தடை காலத்தை இப்பகுதிகளை சேர்ந்த மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள், மீனவர்கள் என 60,000 பேர் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.
மயிலாடுதுறை, பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம் பாடி பகுதிகளில் 1,500 விசைப் படகுகளில் 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.
தஞ்சாவூர், சேதுபாவாசத்திரம், மல்லிப் பட்டினம், அதிராம்பட்டினம் பகுதிகளில் 151 விசைப் படகுகள் உள்ளது. இதில் 10,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.
கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாப் பட்டினத்தில் மொத்தம் 380 விசைப் படகுகள் உள்ளது. இதில் 15,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.
300 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.
தடைக் காலத்தில் தொழிலில்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 நிவாரணமாக வழங்குகிறது.