ஊரடங்கில் நடந்தே சென்று உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி விவரங்கள் இல்லை- மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று பலத்த கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்,பிக்கள், கொரோனா ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு நடந்தே திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்த விபரங்கள், மாநில வாரியான பலியானவர்களின் எண்ணிக்கைகள் மற்றும் இறந்தவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதிலில், ‘அப்படி எந்த ஒரு தகவலும் மத்திய அரசால் பேணப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவிகள் குறித்த கேள்விக்கு, ‘இறந்தவர்கள் குறித்த தகவல்கள் இல்லாததால் நிதியுதவி குறித்த கேள்வியே எழவில்லை’ என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற இந்த பதிலை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.