1. Home
  2. தமிழ்நாடு

சவுக்கு சங்கர் கைது வழக்கில் நடைபெறும் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன - ஜி.கே.வாசன்..!

Q

அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர். இவர் தனியாக யூடியூப் சேனலை தொடங்கி, தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். மேலும், திமுக குறித்தும், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தினர் குறித்தும் அவர் சில காட்டமான விமர்சனங்களை வைத்தார். இந்த சூழலில், பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, அவரது நண்பர்கள் கஞ்சா வைத்திருந்தாக கூறி கைது செய்த போலீஸார், சவுக்கு சங்கர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் கூறப்படுகிறது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முதல்வரை விமர்சித்ததாலேயே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாக அவை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜி.கே. வாசன், “யூடியூபர் சவுக்கு சங்கரின் கைது செய்யப்பட்டது, அதையடுத்து அவர் விபத்தில் சிக்கியது, கஞ்சா கடத்தல் வழக்கு, அவர் மீதான தாக்குதல், அவரது அலுவலகத்தில் சோதனை என அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, இதுதொடர்பான உண்மை நிலை என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்பது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும்” என ஜி.கே. வாசன் கூறினார்.

Trending News

Latest News

You May Like