அறுந்து விழுந்த லிப்ட்.. பரிதாபமாக பலியான பச்சிளம் குழந்தையின் தாய்..!
உ.பி மீரட் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கரிஷ்மா என்ற 30 வயது கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி இன்று அவருக்கு சிசேரியன் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும், அங்கிருந்த ஊழியர்கள் கரிஷ்மாவை பொது அறைக்கு மாற்ற லிப்டில் அழைத்துச் சென்றனர். அப்போது, லிப்ட் பெல்ட் அறுந்ததால், ஸ்ட்ரெச்சரில் இருந்த கரிஷ்மா நிலை தடுமாறி கீழே விழுந்தார். லிப்டில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் லிப்டை திறக்க முயன்றனர்.
இருப்பினும், அது தோல்வியடைந்ததால், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து லிப்டை திறந்து அங்கிருந்தவர்களை மீட்டனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கரிஷ்மா உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கரிஷ்மாவின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கினர்.

இதையடுத்து, தகவல் அறிந்த போலீஸார் மருத்துவமனைக்கு வந்து, அவர்களைச் சமாதானம் செய்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையின் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மருத்துவமனைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் தாய் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.