தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன - வானதி சீனிவாசன்..!

கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “பாஜகவுக்கு ஒன்றுமே இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் செய்த பரப்புரைதான் நோட்டா விவகாரம். நோட்டா கட்சி என்று சொல்வதன் மூலமாக மக்களிடம் செல்வாக்கை குறைக்க முடியும் என்று நினைத்தனர். நோட்டா என்பது கடந்த காலத்தில் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடந்த விஷயம்.
அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்று நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியுள்ளோம். மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். நோட்டா கட்சி என்பதெல்லாம் கடந்த காலம். இப்போது, தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன” என்று தெரிவித்தார்.
மதுவிலக்கு சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த வானதி சீனிவாசன், “அதில் பேசிய அமைச்சர்கள், குடி என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணம் என்பது போல கொண்டு போகிறார்கள். பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியாது என ஒப்புக்கொண்டதன் வாயிலாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என திமுக அரசு சொல்லிவந்தது. தற்போது வீதிக்கு வீதி மதுக்கடைகள் இருந்தும் கூட, கள்ளச் சாராயத்தை தடுக்க முடியாத நிர்வாகத் திறனற்ற அரசாக மாறியுள்ளது” என்றும் கூறினார்.