1. Home
  2. தமிழ்நாடு

தாங்கள் கொத்தடிமைகள் என்பதை தி.மு.க. எம்.பி.,க்கள் நிரூபித்துவிட்டனர் - ஜெயக்குமார் விமர்சனம்..!

1

 உதயநிதி வாழ்க என கோஷமிட்டதன் மூலம் தாங்கள் கொத்தடிமைகள் என்பதை தி.மு.க. எம்.பி.,க்கள் நிரூபித்துவிட்டனர் என்று அதி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

"சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானத்தின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு அதி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “மபொசியின் பிறந்த நாள் விழா, அரசு விழாவாக கொண்டாட முக்கிய காரணம் அதி.மு.க. தான். சென்னையும், திருத்தணியும் தமிழ்நாட்டோடு இருப்பதற்கு மபொசி தான் காரணம். அவர் போராடவில்லை என்றால் சென்னை நம்மிடம் இருந்திருக்காது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 2 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். தலை கொடுத்தாவது தலைநகரை காப்போம் என போராடியவர் மபொசி. அவர் ஒரு தமிழ் மகான்.

மக்களவையில் உறுப்பினர்களாக பதவியேற்ற தி.மு.க. எம்பிக்கள், தாங்கள் ஒரு கொத்தடிமைக் கூட்டம் என்பதை நிரூபித்துவிட்டனர். பதவியேற்பின்போது, உறுதிமொழியை வாசிப்பதுதான் மரபு. ஆனால், தி.மு.க.வின் மூத்த தலைவர்களான ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், செல்வகணபதி உள்ளிட்டோர், பதவியேற்பின்போது உதயநிதி வாழ்க என கோஷமிட்டனர். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் உதயநிதி. ஆனால், தி.மு.க.வின் மூத்த தலைவர்களே தன்மானத்தை இழந்து கொத்தடிமைகள்போல் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

தி.மு.க. எம்பிக்களின் இந்த செயல், வாக்களித்த மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கொத்தடிமைகளை டெல்லிக்கு அனுப்பிவிட்டோமே என்று வாக்களித்த மக்கள் வேதனைப்படுகின்றனர். ஜனநாயகம் இல்லாத கட்சி தி.மு.க.. அந்த கட்சியில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் நினைப்பது தான் நடக்கும். அடுத்ததாக தி.மு.க.வினர், இன்பநிதிக்கும் சேவை செய்வார்கள். பதவிக்காக தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை நினைத்துத்தான் எம்ஜிஆர் அன்றே அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு என பாடினார்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. தி.மு.க. ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை மீனவர்கள் திருடி பயன்படுத்திக் கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. அதி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பெரிதாக நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்பிக்கள், மத்திய அமைச்சரை ஏன் சந்திக்கவில்லை? தாக்குதல் சம்பவங்களை தடுக்க அதி.மு.க. ஆட்சி காலத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த 3 ஆண்டில் தி.மு.க. ஏன் எதுவும் செய்யவில்லை? கும்பக்கரண அரசாக தி.மு.க. அரசு உள்ளது என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like