1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில்‌ வறுமை கோட்டிற்கு கீழ்‌ மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்க தே.மு.தி.க தொடர்ந்து பாடுபடும்‌..!

1

2005-ல் இதே நாளில்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் விஜயகாந்த்,கட்சி தொடங்கிய பிறகு சந்தித்த முதல் சட்டமன்றத்தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தே.மு.தி.க சார்பில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளரான விஜயகாந்த், அதற்கடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணியமைத்து 29 இடங்களில் வெற்றிபெற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவரானார்.

ஆனால், அதன்பின்னர் வரிசையாக வந்த இரண்டு நாடாளுமன்ற மற்றும் இரண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், தே.மு.தி.க இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவுசெய்து, 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதனை முன்னிட்டு, விஜயகாந்த் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், நமது தே.மு.தி.க தொடங்கி 18 ஆண்டுகள்‌ முடிவடைந்து, இன்று 19-ம்‌ ஆண்டில்‌ அடியெடுத்து வைக்கிறது. எந்த கட்சியிடமிருந்தும்‌ பிரிந்து வராமல்‌ லஞ்சம்‌, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின்‌ முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும்‌ முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.

சாதி, மதம்‌, ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக, `ஒரே குலம்‌ ஒரே இனம்‌’ என்ற கோட்பாட்டோடு சனாதனத்தை கடைபிடிக்கும்‌ கட்சியாக தே.மு.தி.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே பாணியில்‌ தான்‌ எப்போதும்‌ செயல்படும்‌. தோல்வி என்பது சறுக்கல்‌ தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில்‌ தே.மு.தி.க-வின் பலத்தை நாம்‌ அனைவருக்கும்‌ நிச்சயமாக நிரூபிப்போம்‌.

தொடர்ந்து நமது கட்சியின்‌ வளர்ச்சிக்காக அனைத்து வியூகங்களை அமைப்போம்‌. தமிழ்நாட்டில்‌ நிலவும்‌ மணல்‌ கொள்ளை, மீனவர்கள்‌ பிரச்னை, டாஸ்மாக்‌ கடைகளால்‌ ஏற்படும்‌ அவலங்கள்‌, சட்டம்‌ ஒழுங்கு பிரச்னை, பாலியல்‌ வன்‌கொடுமைகள்‌, சுங்க கட்டண உயர்வு, அண்டை மாநிலங்களுக்கிடையே உள்ள தண்ணீர்‌ பிரச்சனை, விவசாயம்‌ அழிந்து பாலைவனமாகக் காட்சியளிக்கும்‌ டெல்டா பகுதிகள்‌, அனைத்து சாலைகளும்‌ குண்டும்‌, குழியுமாக உள்ளதால்‌ மக்கள்‌ பயன்படுத்த முடியாத அவலம்‌, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு போன்ற எத்தனையோ பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றிற்குத் தீர்வு காணவும்‌, தமிழ்நாட்டில்‌ வறுமை கோட்டிற்கு கீழ்‌ மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும்‌, தே.மு.தி.க தொடர்ந்து மக்களுக்காகவும்‌, தமிழ்நாட்டின்‌ வளர்ச்சிக்காகவும்‌ பாடுபடும்‌.

தே.மு.தி.க தனக்கென்று ஓர்‌ இடத்தை தக்கவைத்துக்‌ கொண்டு இருக்கிறது என்றால்‌ அதற்கு முக்கியமாக சாதி, மதம்‌, இனம்‌ போன்ற எந்த பாகுபாடும்‌ இல்லாமல்‌ அனைவருக்கும்‌ பொதுவான கட்சியாகத் தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும்‌. எந்தவித வன்முறைக்கும்‌ இடம்கொடுக்காமல்‌ அறவழியில்‌ மக்கள்‌ பிரச்னைக்காகத் தொடர்ந்து குரல்‌ கொடுத்துப் போராடி வரும்‌ இயக்கமாகும்‌. தமிழக மக்கள்‌ நம்‌ இயக்கத்தின்‌ மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும்‌ உயர்த்தும்‌ வண்ணம்‌ செயல்படுவோம்‌. `இயன்றதைச் செய்வோம்‌ இல்லாதவர்க்கே’ என்கிற கொள்கையின்‌ அடிப்படையில்‌ ஏழை, எளிய மக்களுக்கு தங்களால்‌ இயன்ற உதவிகளைச் செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்‌” என்று தொண்டர்களுக்கு விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Trending News

Latest News

You May Like