உறுதியானது 4 முனை போட்டி.. வெற்றி யாருக்கு?

தவெக தலைவர் விஜய், அரசியல் எதிரி மற்றும் கொள்கை எதிரி ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கூறியுள்ளார். இதன் மூலம், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியிலும், தி.மு.க. கூட்டணியிலும் தமிழக வெற்றி கழகம் இடம்பெறாது என்பதை அவர் உறுதி செய்துவிட்டார். எனவே, தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி, நாம் தமிழர் கூட்டணி என நான்கு முனைப் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
இதில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை ஐந்து முதல் எட்டு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்றும், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சீமான் கட்சியில் உள்ள பெரும்பாலான வாக்குகள் விஜய்க்குத்தான் சென்றுவிடும் என்பதால், வரும் தேர்தலில் அவருக்கு வாக்கு சதவீதம் குறையும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே, உண்மையான போட்டி என்பது அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேதான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
75 சதவீத வாக்குகள் பதிவானால், அதில் மூன்று கூட்டணிகளும் தலா 25% வாக்குகளைப் பெற்றால், தொங்கு சட்டசபை அமையும் என்றும், அதன் பின் பல அரசியல் நாடகங்கள் அரங்கேறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.