இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 37 வயதான இவருக்கும் முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து 7 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில். மணிகண்டனுக்கு இருந்த மதுப்பழக்கத்தால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு மனைவி பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சென்று விட்டார்.
இந்நிலையில் தனது தாய் தந்தை வீடான தங்கமலை மற்றும் செல்வம்மாள் ஆகியோரின் வீட்டில் தங்கம்மாள்புரம் கிராமத்தில் தங்கி வாழ்ந்து வந்த மணிகண்டன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கூலி வேலைக்கு செல்வதாக கூறி வெளியூர் சென்றுவிட்டார் .அவருடைய தந்தையும் கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்று விட்டார். இந்த நிலையில் அவருடைய தாய் மட்டும் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் 13-ஆம் தேதி காலை அவருடைய தங்கம்மாள்புரம் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசி உள்ளது.
இதையடுத்து அருகே இருந்தவர்கள் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற கடமலைக்குண்டு காவல்துறையினர் அங்கிருந்து மணிகண்டனின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் தகவல்படி இறந்து கிடந்தது மணிகண்டன் என்று உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அந்த உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம்மாள்புரம் கிராமத்திற்கு இறந்ததாக கூறப்பட்ட மணிகண்டன் வந்துள்ளார்.
அவரை பார்த்த கிராம மக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துள்ளனர். வெளியூர் சென்று இருந்து தனது தாய் தந்தையை பார்க்க வந்ததாக மணிகண்டன் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மணிகண்டனிடம் கடமலைக்குண்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன மணிகண்டன் வந்து விட்டால் வீட்டிற்குள் இறந்து கிடந்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவருடைய தந்தையும் வெளியூர் சென்றிருப்பதாலும், அவருடைய கையில் கைப்பேசி இல்லாததாலும் இறந்து போனது அவரது தந்தையா என்றும் அல்லது வேறு நபரா என்றும் பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர். இந்த விஷயத்தில் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தங்கம்மாள்புரத்தில் உள்ள மணிகண்டன் வீடு பூட்டப்பட்டுள்ளது. குடும்பத்தினர் யாரும் ஊரில் இல்லை. இறந்து போனதாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்து மீண்டும் குடும்பத்தினரோடு தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.