1. Home
  2. தமிழ்நாடு

70 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்... இந்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!

1

வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4-ம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

அதன்பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூர் – மசூலிப்பட்டணம் இடையே 5-ம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும். அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 3-ம் தேதி சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை வீசக்கூடும். டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். எனவே 4,5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like