பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் செங்கோட்டையின் தற்போதைய நிலை...!
வட கிழக்கு மாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை காரணமாக டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
தலைநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ள மக்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைகள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
செங்கோட்டை, காஷ்மீரி கேட், சந்திரவால், பூர்ணாகுவில்லா, ரிங்ரோட் உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் டெல்லி செங்கோட்டை தற்போது மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
கட்டாந்தரையாக காணப்பட்ட இந்த பகுதிகள் தற்போது கரைபுரண்டு ஓடும் வெள்ள நீராக காட்சி அளிக்கிறது.
வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டனர். வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை மேடான பகுதிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் சென்றனர்.
பல இடங்களில் சுமார் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளதால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழுத்தளவு தண்ணீரில் சைக்கிள் ரிக்ஷாவை ஒருவர் ஓட்டி சென்ற வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.