எமனாக வந்த மாடு... தலைக்குப்புற கவிழ்ந்து மாணவன் பலி!

திண்டிவனம் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் நரேஷ் குமார்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்த அவர், தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு டிராக்டரில் சென்றார்.
பைடப்பாக்கத்தில் இருந்து லாலாபேட்டை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாடு சாலையின் குறுக்கே வந்துள்ளது. அப்போது நரேஷ் குமார் திடீரென பிரேக் அடித்துள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நரேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.