நாடே அதிர்ச்சி..! 70 ஆயிரம் கொடுத்த போலி மருத்துவ டிகிரி..!
குஜராத்தின் சூரத் நகரில், போலி மருத்துவ டிகிரி வைத்து, மூன்று பேர் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அவர்களின் கிளினிக்குகளில் சோதனை நடத்தினர்.
அவர்களிடம் மருத்துவ சான்றிதழை காட்டும்படி கேட்டதற்கு, 'எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம்' என்ற பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழைக் காட்டி உள்ளனர். ஆனால், அதுபோன்ற படிப்பே குஜராத்தில் இல்லை என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் ரமேஷ் என்பவர் 70,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, இந்த சான்றிதழ்களை வழங்கியதாகவும், இதை வைத்து ஹோமியோபதி, அலோபதி, ஆயுர்வேத மருத்துவம் பார்க்கலாம், எந்த பிரச்னையும் வராது என்று கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் வினியோகித்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு என்று எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாததை அறிந்த ரமேஷ், அந்த படிப்பின் பெயரில் ஒரு மருத்துவ வாரியத்தை அமைத்து, 15 நாட்களுக்குள் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அவரிடம் சான்றிதழ் பெற்று கிளினிக் நடத்தி வந்த 14 போலி டாக்டர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ சான்றிதழ் பெற அவர் ஏற்படுத்திய மருத்துவ வாரியத்தில் 1,200 பேர் பதிவு செய்திருப்பது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.