1. Home
  2. தமிழ்நாடு

நீதியே முதன்மை' என்ற கொள்கையில் புதிய நீதித்துறை நெறிமுறைகளை நாடு பெற்றுள்ளது - ஜனாதிபதி திரெளபதி முர்மு பெருமிதம்..!

1

பாராளுமன்ற 17-வது மக்களவையின் கடைசி பாராளுமன்றக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முா்மு உரையாற்றினார்.

புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசியதாவது., பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள், ஏழை மக்களே இந்த நாட்டின் தூண்கள். இந்தியாவில் இந்த 4 தூண்களை வலுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. உலக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதமாக உள்ளது. இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. ரெயில்வே துறையை முழுக்க முழுக்க மின் மயமாக்கும் பணி விரைவில் நிறைவுபெற உள்ளது. 100க்கும் அதிகமான வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. இந்தியாவின் சாலை போக்குவரத்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கி.மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பயனாளியையும் விட்டுவிடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே எனது அரசின் இலக்கு. ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. உலக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதமாக உள்ளது. எளிமையாக தொழில் தொடங்கும் தளமாக இந்தியா மாறி வருகிறது. ஏழை பெண்களுக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன் பெறும் நடைமுறை எளிதாகி உள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியாவை நோக்கி உலகமே ஈர்க்கப்படுகிறது. மேக் இன் இந்தியா என்பதே உலகளவில் பிராண்டாக மாறிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. நாட்டில் மாவோயிஸ்டுகள் வன்முறையும் குறைந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதம் போன்ற செயல்களுக்கு நமது படைகள் பதிலளிக்கின்றன. ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களில் மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டியுள்ளன. பிராந்திய மொழிகளில் பொறியியல், மருத்துவம், ஆகிய படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. 4.1 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல முன்னெடுப்புகளை செய்துள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு 27  சதவிகிதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.'நீதியே முதன்மை' என்ற கொள்கையில் புதிய நீதித்துறை நெறிமுறைகளை நாடு பெற்றுள்ளது. திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பான அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நாட்டு மக்கள் காத்துக்கொண்டிருந்த மாற்றங்கள் 10 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 5 நாளில் 13 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

1.15 மணிநேரம் உரை

ஜனாதிபதியின் உரையில், கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து பேசினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு செய்த பணிகளை விளக்கினார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றிருந்தது. சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய ஜனாதிபதியின் உரை 1 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு பிறகு பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்தது.

Trending News

Latest News

You May Like