மக்களிடம் கையேந்திய கவுன்சிலர்கள்... திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை..!

தேனி நகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஆறு பேர் தங்களது பகுதியில் எந்தவித திட்டங்களையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினர்.
பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆறு பேரும் நகராட்சி அலுவலக நுழைவாயில் அருகே தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த போதுமான நிதி இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறிவிட்டதால் பிச்சை எடுத்தாவது அத்திட்டங்களை நிறைவேற்றப்போவதாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவ்வழியே சென்ற பொதுமக்களை நோக்கி, கையெடுத்து கும்பிடு போட்டபின், மீண்டும் கைகளை ஏந்தி, ‘பொதுமக்களே பிச்சை போடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், நகர மன்றத் தலைவர் ரேணுகா பாலமுருகன் ஆறு பேரையும் சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.