மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல தற்போது இந்திய மக்களின் நிலை உள்ளது - ராகுல் காந்தி..!
பட்ஜெட் மீதான விவாதத்தில், லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: இந்திய மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நாடு முழுவதும் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பா.ஜ.,வில் உள்ள ஒரு சில தலைவர்களே பயத்துடன் உள்ளனர். பா.ஜ., ஆட்சியில் மத்திய அமைச்சர்களே பயத்துடன் வாழ்கின்றனர்.
மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல தற்போது இந்திய மக்களின் நிலை உள்ளது. பா.ஜ.,வின் சக்கர வியூகம் நாட்டு மக்களுக்கு உதவவில்லை. சக்கர வியூகத்திற்குள் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் இருந்தது போல் இங்கு மோடி, அமித்ஷா உள்ளனர். பா.ஜ., ஆட்சியில் ஒருவர் மட்டும் தான் பிரதமர் ஆக கனவு காண முடியும். மற்றவர்களுக்கு உரிமையில்லை. பா.ஜ.,வில் ஒருவரே பிரதமராக முடியும். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமராக விரும்பினால் அப்போது பிரச்னை ஏற்படும்.
நாட்டில் பயம் தரக்கூடிய சூழல் நிலவுகிறது. இங்குள்ள பா.ஜ., உறுப்பினர்களின் சிரிப்பில் கூட பயம் தெரிகிறது. சிறு, குறு தொழில் செய்பவருக்கு நள்ளிரவு வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி துறையில் இருந்து அழைப்பு வருகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த பணி பயிற்சி திட்டத்தால், நாட்டில் உள்ள 99 சதவீத இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது.
கடந்த 20 ஆண்டுகளில் கல்விக்கு குறைவான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு 2.5% மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே முதல் முறை. கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை போட்டி தேர்வில் வினாத்தாள்கள் கசிவு நடந்துள்ளது. அது பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை. நுழைவு தேர்வுக்கான நெறிமுறைகள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
வருமான வரி துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சி செய்யப்படுகிறது. வரி தீவிரவாதத்தால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலையின்மை தொடர்கிறது. மறுபுறம் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.கொரோனா காலத்தில் கை தட்டுவதும், மொபைல் போனில் டார்ச் அடிப்பதும் தான் இளைஞர்களுக்கு வழங்கும் வேலைவாய்ப்பா?.
ராணுவத்தில் பணிபுரியும் அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் தரப்படுவதில்லை. நான் விவசாயிகளை சந்திப்பதை இந்த அரசு தடுக்க பார்த்தது. சொத்துக்கள் விற்பனை செய்யும் போது கூடுதல் வரி விதிப்பது நடுத்தர மக்களின் முதுகில் குத்துவது போன்றது. வேளாண்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய இண்டியா கூட்டணி விரும்புகிறது.
இது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏன்?. பெரும் முதலாளிகளுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. நீண்ட கால முதலீட்டு லாபங்களுக்கான வரியை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களின் நெஞ்சில் குத்தும் செயல். இவ்வாறு ராகுல் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: பார்லிமென்ட் மாண்பை குலைக்கும் வகையில் ராகுல் பேசுகிறார். லோக்சபா சபாநாயகருக்கே ராகுல் சவால் விடுகிறார். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, ராகுல் உண்மையை பேச வேண்டும். உண்மைக்கு புறம்பானதை அவையில் பேசக் கூடாது.'' என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.
.png)