1. Home
  2. தமிழ்நாடு

நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் முதலமைச்சர் பிதற்றுகிறார்..!

Q

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள்குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது.
இன்னும் 116 வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும். ஆனால் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல் அதிமுக தரப்பில் ரேஷன் கார்டுகளுக்கு செல்ஃபோன் வழங்கப்படும், மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும் என்றார்கள். அதிமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்கான அறிவிப்பு, அரசாணை மற்றும் தேதியை வெளியிடத் தயாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் பிதற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 4 ஆண்டுகளாகச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில், அதைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் திசை திருப்ப முயற்சி செய்கிறார்.
இனியாவது நிதி நிலைமை, மக்கள் பிரச்சனைகளில் நாங்கள் சொல்வதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர், தொழில் வரி ஆகியவை பலமடங்கு உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நீட் தேர்வு ரத்து, குடும்ப அட்டைக்குக் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும், எரிவாயு சிலிண்டர் ரூ.100 மானியம், மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு, மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும், முதியோர் உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்தப்படும் என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுகுறித்த வெள்ளை அறிக்கை தேவை. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள்குறித்து ஆராய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதன் நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.
2016ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். கடைசி ஒன்றரை ஆண்டுகள் கொரோனா சிக்கல் காரணமாகச் சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை.
அதேபோல் நிதிநிலை குறித்து 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியில் அப்போதைய நிதியமைச்சர் நிதி நிலைகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
அதுபோல் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை குறித்தும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும், இதுவரை எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் வழங்கியது, அவ்வறிக்கைகள் மீது எடுத்து நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடலாமே ? தமிழக மக்கள் உண்மை நிலையை உணர்ந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like