விரைவில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் : அமைச்சர் கே.என்.நேரு..!

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ஜோதி அம்மாள் நகரில் 6.58 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் உந்துநிலையம் செயல்பாட்டினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 49.77 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, 30 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா துணை மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சென்னையில் தற்போதைய குடிநீர் தேவை நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டியாக உள்ளது. அடுத்த ஓராண்டில் கூடுதலாக செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 250 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக கொண்டு வரவ திட்டமிட்டுள்ளோம். நெம்மேலியில் 150 எம்.எல்.டி கொள்ளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் நிறைவடைந்து தண்ணீர் விநியோகத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 400 எம்.எல்.டி கொள்ளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. மேலும், சென்னையில் 24 மணிநேரமும் பாதுகாக்கபட்ட குடிநீரை வழங்குவது தான் எங்களுடைய குறிக்கோளாக உள்ளது” என்றார்.