15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால் மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்க முடியவில்லை..!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு, “நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் நடக்கும் நிலையில் பிரதமர் மோடி மக்களவைக்கு வராதது ஏன்? நரேந்திர மோடி அவர்களை தேர்தல் மூலம் தங்களுடைய பிரதிநிதியாக மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதே இல்லை. பிரதமர் மோடியை பேச வைக்க தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம். இதை தவிர அவரை மக்களவைக்கு வர வைக்க வேறு வழி இல்லை என்பதால் தான் இப்படியான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம்.
கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. பாஜக வேலைவாய்ப்பின்மையை அதிகரித்துள்ளது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மத்திய அரசு தடுக்க வில்லை. சேது சமுத்திரம் திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன்? ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க முடியவில்லை. உலகம் முழுவதும் சென்று திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழுக்கும், தமிழகத்திற்கும் என்ன செய்தார்?” என கேள்வி எழுப்பினார்.