அண்ணனை உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் அடைத்த தம்பி.. ஆன்மா பிரிய காத்திருந்ததாக அதிர்ச்சி தகவல்

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சரவணன் (70) என்பவர் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அதாவது மூத்த சகோதரன் பாலசுப்பிரமணிய குமார் (74), தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ (50), கீதா (48) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சரவணன் ஏற்காடு பகுதியில் உள்ள தனியார் பிரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து சடலத்தை வைக்க பிரீசர் பாக்ஸ் அனுப்புங்கள் எனக் கேட்டுள்ளார்.அதன்படி அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரீசர் பாக்சை கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் இறந்தவர் உடல் எங்கே என கேட்டுள்ளனர். அப்போது தனது அண்ணன் இறந்துவிட்டார், தனியார் மருத்துவமனையில் இருந்து வருகிறது, நீங்கள் பிரீசர் பாக்சை இறக்கி விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் 2 மணி அளவில் பிரீசர் பாக்சை எடுக்க அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் வீட்டிற்கு சென்றனர். அப்போது பிரீசர் பாக்சில் முதியவர் ஒருவர் உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஊழியர்கள் அவரை மீட்க முயன்றபோது, வெளியே எடுக்கக்கூடாது என சரவணனும், ஜெயஸ்ரீயும் தடுத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் சூரமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது அண்ணன் இறந்துவிட்டார், அவரது ஆன்மா பிரிய வேண்டும் என்பதற்காக பிரீசர் பாக்சில் வைத்துள்ளோம் என சரவணன் கூறியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து பிரீசர் பாக்ஸில் உயிருக்கு போராடிய முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை மீட்டனர். அங்கு வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மருத்துவமனை அழைத்துச்சென்றனர். பின்னர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
ஆனால், சரவணனும், ஜெயஸ்ரீயும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களாக இருந்ததால், இத்தகைய சம்பவம் நடந்துள்ளது என அக்கம் பக்கத்தினரும் தெரிவித்தனர்.
newstm.in