நண்பர்களுடன் ஆற்றில் குதித்த சிறுவன் திரும்ப வரவில்லை.. ஒருநொடியில் நடந்த விபரீதம் !

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ ராஜவீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரின் மகன் அப்துல் காதர் 10-ஆம் வகுப்பு படித்துவந்தார்.
அப்துல் காதர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து அப்பகுதியில் செல்லும் பாமணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அவர்கள் 5 பேரும் ஆற்றில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தப்போது திடீரென, ஏற்பட்ட நீர் சுழலில் அப்துல் காதர் சிக்கினார். பின்னர் அடுத்த விநாடியே அவர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.
அப்துல் காதர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடியும் முடியவில்லை. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டுமணி நேரமாக போராடி அப்துல் காதரை சடலமாக மீட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in