பாறைகளுக்கு இடையே சிக்கிய சிறுவன்.. கொளுத்தும் வெயிலில் போராடிய வீரர்கள் !

திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில், இன்று காலை 12 வயதான ஆதித்யா என்ற சிறுவன் வழக்கம்போல் ஆடுமேய்ச்சலுக்கு சென்றுள்ளார்.
ஆடுகளை கிழே நிலத்தில் விட்டுவிட்டு அங்கு இருந்த பாறைகள் மீது அமர்ந்து சிறுவன் தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவனது செல்போன் அங்கிருந்த பாறையின் உள்ளே விழுந்தாகத் தெரிகிறது. அதனை எடுப்பதற்காக ஆதித்யா முயன்றுள்ளான். இந்த முயற்சியின் போது அவன் எதிர்பாராத விதமாக பாறைகளுக்கு இடையேயான பள்ளத்தில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.
வெகுநேரம் ஆகியும் ஆதித்யா காணாத அவனது சக நண்பர்கள் அவனை தேடி உள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்த ஆதித்யா சத்தம் கேட்டு, அவன் ஆறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டதை அவர்கள் அறிந்தனர். உடனடியாக அவர்கள் தாத்தையங்கார் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி ஆதித்யாவை உயிருடன் மீட்டனர்.
எனினும் சிறுவன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார்.
newstm.in