அந்த பையனுக்கு ரெண்டு காலும் போயிருச்சே.. நடிகை ரஞ்சனா கண்ணீர்..!

சென்னை குன்றத்தூர் பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் பேருந்துகளில் செல்லும் போது படிகட்டிலும், ஜன்னல்களிலும் தொங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதனால் சில நேரங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் வழக்கமாக இருக்கிறது.
இதனிடையே, பாஜக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார், இரு வாரங்களுக்கு முன்பு குன்றத்தூரில் பஸ் படிகட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களை நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் ரஞ்சனா நாச்சியாரை போலீஸார் வீடு புகுந்து கைது செய்தனர். பின்னர் அதே நாளில் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.
இந்த சூழலில், கடந்த (நவ.17) அதே குன்றத்தூரில், ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை தாக்கிய அதே இடத்தில் அரசுப் பேருந்தின் படிகட்டில் தொங்கிக் கொண்டு வந்த மாணவன் ஒருவன், தவறி கீழே விழுந்து இரண்டு கால்களும் துண்டாகின. இதையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.
இந்நிலையில், மாணவன் அனுமதிக்கப்பட்டிருக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரஞ்சனா நாச்சியார் நேரில் வந்து அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் ஒரு தாயாக துடிதுடித்து இங்கு வந்துருக்கேன். எதற்காக அன்று அந்த மாணவர்களை நான் அடிச்சேனு இப்போ எல்லோருக்கும் தெரிஞ்சிருக்ககும். நான் அப்படி செய்த பிறகாவது, அரசு இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை.
இன்று ஒரு மாணவனுக்கு கால்களே போய்விட்டது. இனி அவன் வாழ்நாள் முழுவதும் அவனது அன்றாட விஷயங்களை கூட யாருடைய உதவியாவது அவன் எதிர்பார்க்க வேண்டும். பாவம். அந்த பையன் மனசு எப்படி பாடுபடும். அவனை பார்த்து அவங்க அம்மா எப்படி தினம் தினம் துடிச்சு போவாங்க. பள்ளிக்கூட மாணவர்களுக்கு கதவை தாழிடக்கூடிய பேருந்துகளை அரசு அதிகப்படியாக கொண்டு வர வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும். இப்போ நான் இங்க வந்ததற்கும் ஏதேதோ சாயம் பூசுவாங்க. அதை பற்றி எனக்கு கவலை இல்ல" என ரஞ்சனா நாச்சியார் கூறினார்.