விபத்தில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பைக்..நொடியில் பறிபோன தம்பதியின் உயிர்..!
சென்னை திருவேற்காடு பள்ளிக்குப்பம், ராஜீவ் நகரை சேர்ந்தவர் அறிவரசன் (41). அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரண்யா (36). திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அறிவரசன் தனது மனைவி சரண்யாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி வசந்தம் நகர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் திடீரென மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்பற கவிழ்ந்தது. இதுகுறித்து சக வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறிவரசன், சரண்யா தம்பதியின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு மருத்துவர் பாரிமார்க்ஸ் என்பவரை படுகாயங்களுடன் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.