ஆசையாக சாப்பிட்ட பரோட்டா.. கர்ப்பிணி மற்றும் வயிற்றில் இருந்த 2 சிசுக்களின் உயிரை பறித்தது..!

அருப்புக்கோட்டை அருகே, பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கன். இவரது மனைவி அனந்தாயி(26). சமீபத்தில் இவர் கர்ப்பமுற்றார். அவருடைய வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்துள்ளது.
இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்தாயி நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பரோட்டா சாப்பிட்டதால் வயிற்று வலி ஏற்பட்டதாக கணவரிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் உடனடியாக அனந்தாயி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால், சிகிச்சை பலனின்றி அனந்தாயி உயிரிழந்தார். இதில் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தன.
பரோட்டா சாப்பிட்டதால் கர்ப்பிணி மற்றும் வயிற்றில் இருந்த 2 சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் வதுவார்பட்டி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.