இதனால் தான் தமிழக அரசு ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகிறது : அண்ணாமலை..!

‘என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்.
தேனி பொம்மைய கவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியே பங்களாமேடு வரை அவர் நடந்து சென்றார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மது குடித்தவர்களால் கொல்லப்பட்டோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்குகின்றனர். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கினர்.
இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மக்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்றஎண்ணத்துடன், பலரும் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். கஞ்சா, மது, சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பதை விடுத்து, சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்கள்.
மோடி அமைச்சரவையில் உள்ள 79 அமைச்சர்களில் 20 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களில் பெண்கள் 11 பேர். 25 சதவீதம் பட்டியலினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில், 3 இடங்கள் மட்டுமே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 23 தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதில் 11 கல்லூரிகள் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. அதனால்தான் தமிழக அரசு ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகிறது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.