இது தான் இப்போ ட்ரெண்டாம்..!! இந்திய இளைஞர்களிடம் பிரபலமடையும் 'போலி திருமணங்கள்..!
இந்தியாவில் இளம் தலைமுறை Gen Z, பழமையான திருமண மரபுகளை மாற்றி ஒரு புதிய பார்ட்டி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் போலி திருமண விழாக்கள் (Fake Weddings). இந்த விழாக்கள் உண்மையான திருமண விழாவை போலவே பிரம்மாண்டமாக இருக்கும்.
போலி திருமணம் என்றால் என்ன?
இந்தப் போலி திருமணத்தில் உண்மையான மணமக்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் திருமண விழாவைப் போலவே இது நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்பவர்கள், மணமக்கள், உறவினர்கள், நண்பர்கள் போல நடித்து, திருமணத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். பாரம்பர்ய அலங்காரங்கள், மெஹந்தி, சங்கீத், நடனம், இசை, மற்றும் சுவையான உணவு என அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன.
இந்த ட்ரெண்ட் ஏன் பிரபலமாகிறது?
இந்தியாவில் உண்மையான திருமணங்களின் செலவு மற்றும் அழுத்தம் அதிகரித்து வருவதால், இளைஞர்கள் இந்தப் போலி திருமணங்களை ஒரு மகிழ்ச்சிக்காக விரும்புகின்றனர்.
உண்மையான திருமணத்தின் பொறுப்புகள் இல்லாமல், அதன் மகிழ்ச்சியை அனுபவிக்க இளைஞர்கள் விரும்புகின்றனர். இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான பார்ட்டி அனுபவத்தை இது கொடுக்கிறது.
இந்த போலி திருமண விழாக்கள் தற்போது டெல்லி, பெங்களூரு, புனே போன்ற மெட்ரோ நகரங்களில் பிரபலமாகி வருகின்றன. டெல்லியில் இதுபோன்ற நிகழ்வுக்கு இதனை ஏற்பாடு செய்யும் ஜும்மா கி ராத் என்ற நிறுவனம், நுழைவுக் கட்டணமாக ரூ.500 முதல் ரூ.3,000 வரை வசூலிப்பதாக இன்ஸ்டாகிராமில் முகுல் குரானா என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறான சில நிகழ்ச்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாகவே டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன. சில நிகழ்வுகள் கல்லூரி வளாகங்களில் அல்லது கருத்தரங்கில் திடீரென ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது. முக்கியமாக ஜென் Z (Gen Z) என்ற இளம் தலைமுறையினர் இதை அதிகமாக விரும்புகின்றனர். ஏனென்றால், இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உறவினர்கள் இல்லை. கடுமையான மற்றும் பழமையான வழக்கங்கள் இல்லை. இந்த திருமண நிகழ்சியில் இசை, சுவையான உணவு மற்றும் ஒருமைப்பாட்டின் உணர்வு மட்டுமே இருக்கும். இந்த விழாக்களின் மைய நோக்கமே கொண்டாட்டம் தான். அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி இருப்பதற்கும், சமூக வலைத்தளத்தில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதற்கு மட்டுமே இது பயன்படுகிறது.
இந்த போலி திருமண விழாக்கள் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் போலி திருமண விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்று இன்ஸ்டா பயனர் முகுல் குரானா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பயனர் ஒருவர், "இது மற்ற பல டிரெண்ட்களைப் போல சில காலத்துக்கு இருக்கும். பின்னர் மறைந்து போய்விடும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், இந்த தலைமுறையினர் எங்கு செல்லப்போகிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஒருவர் இன்றைய தலைமுறையினர் வழிமுறைகளை இழந்துவிட்டனர். அவர்களை சரியாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தவறான பாதையில் நகர்த்தப்படுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
சிலர் இந்தப் போலி திருமணங்களை கலாசாரத்திற்கு எதிரானவை என்று விமர்சிக்கின்றனர். திருமணம் என்பது புனிதமான பந்தம், இதை விளையாட்டாக மாற்றுவது தவறு என்கின்றனர். ஆனால், ஆதரவாளர்கள் இது வெறும் பொழுதுபோக்கு என்றும், இதில் எந்தத் தவறும் இல்லை என்றும் வாதிடுகின்றனர்.
.png)