1. Home
  2. தமிழ்நாடு

அந்த மனசு தான் சார் கடவுள்... 7 வருடங்களாக ஒரு குடும்பத்தை உதவும் சிவகார்த்திகேயன்..!

1

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்த நெல் ஜெயராமன் கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் சென்னை அப்போலா மருத்துவமனையில் காலமானார். அவர் இரண்டு வருடங்களாக தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்காக பல சிகிச்சைகள் எடுக்கப்பட்ட போதிலும் கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு இயற்கை ஆர்வலர் நம்மாழ்வாரின் வழி நடந்து இயற்கை விவசாயத்தை தமிழகத்தில் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்தார். 12 ஆண்டுகள் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் ரக உற்பத்தியை பெருக்கி வந்தார். ஆனாலும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து இருந்தனர். அதுபோல திமுக தலைவர் ஸ்டாலின், சீமான் உட்பட பலரும் நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

அப்போது சிவகார்த்திகேயன் ஜெயராமன் சிகிச்சை பெறுவதற்கான செலவுகளை நான் செலுத்துகிறேன் என்று முழு செலவுகளையும் செலுத்தி இருந்தார். அவருடன் அரசு சார்பிலும் சில உதவிகள் ஜெயராமனுக்கு கிடைப்பதாக கூறப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இறந்த பிறகு அவருடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செலவை ஏற்று இருந்தார். அப்போது ஜெயராமனின் மகன் கல்வி செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் செயல் குறித்து ரா. சரவணன் என்பவர் தன்னுடைய facebook பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த பதிவில், “அண்ணன் நெல். ஜெயராமன் மறைந்த போது அவர் மகனின் படிப்பு செலவு ஏற்பதாக தம்பி சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இப்படி சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள் அடுத்த வருடத்தில் நாம நினைவூட்டினால் கூட கொஞ்சம் சலிப்பு காட்டுவார்கள், பின்பு மறந்து போய்விடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த ஏழு வருடங்களாக ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவுக்கு பணம் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் ஃபோன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாக ஸ்ரீனிவாசனிடம் பேசுவார். இந்த வருடம் ஸ்ரீனிவாசன் கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்த கல்லூரி? என்ன படிப்பு? என்ற விவரங்களை சேகரித்து கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரை சேர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் ஸ்ரீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் தம்பி சிவகார்த்திகேயன்.

அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்கள் ஜெயராமன் உடல் நிலையில் கை விரித்த நிலையில் பாண்டிச்சேரி படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்து ஜெயராமனின் கைகளை பற்றி கொண்டு “நான் இருக்கிறேன் அண்ணா” என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி அப்படியே என்னுடைய நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி” என்று ரா. சரவணன் கூறி இருக்கிறார்.

Trending News

Latest News

You May Like