1. Home
  2. தமிழ்நாடு

திருமண வரம் தரும் தை கிருத்திகை விரதம்.. என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது..!

1

27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

 

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.

 

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். உத்தராயன புண்ணிய காலம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக தை கிருத்திகை, தை பூசம் நாளை கொண்டாடுகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான்.

திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பதைத்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறினார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பழமொழி, தை பொங்கலோடும் தொடர்புடையது.

விரதம் இருப்பது எப்படி: தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள் நாளைய தினம் புனித நீர் நிலைகளில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும்.

பதவி யோகம் தரும்: தை கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும். இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம். கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து 12 ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பெரும் பேற்றினைப் பெற்றார். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள்.

செய்யக்கூடாதவை: உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. கிருத்திகை நாளில் முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் முடிந்த வரை தேவையற்ற பேச்சுக்களை பேசக்கூடாது. சாத்வீகமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். ஆலய தரிசனம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மன தூய்மையும் முக்கியமாகும். விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பராயணம் செய்யலாம்.

Trending News

Latest News

You May Like