நெல்லையில் பயங்கரம்..! காதலி கண் முன்னே காதலன் வெட்டிக் கொலை..!
திருநெல்வேலி சேர்ந்தவர் தீபக்ராஜா. 30 வயதான இவர், இன்று தனது காதலியுடன் கேடிசி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்தச் சென்றுள்ளார்.
அப்பொழுது, ஹோட்டலின் வாயிலில் வைத்து திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர், தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். காதலியின் கண்முன்னே கழுத்து மற்றும் முகத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தீபக்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தீபக் ராஜா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 2016 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவம் உள்ளிட்ட சில குற்ற வழக்குகளில் தீபக் ராஜா சிக்கி இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
அதேநேரம், இவர் 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பெரும்பாலும் சாதி ரீதியான மோதல்களில் தொடர்புடைய வழக்குகளில் சிக்கியுள்ளதால், சாதிய முன் பகையின் காரணமாக வெட்டி சாய்க்கப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடந்த இந்த கொலைச் சம்பவம் நெல்லை மாநகரை பதற வைத்துள்ளது.