சென்னையில் பயங்கரம்..! சூட்கேஸில் துண்டு துண்டாக கைப்பற்றப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது..!
சென்னையில் இன்று காலை பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், இது குறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், ரத்தக் கறைகளுடன் இருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அந்த உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சென்னை மணலி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு இருக்கும் உடல் தீபா என்பதும் போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தீபாவை யார் கொலை செய்தது, எதற்காக கொலை செய்யப்பட்டார், வேறு எங்கோ கொலை செய்துவிட்டு உடலை வெட்டி சூட்கேஸில் வைத்து இங்கு வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் காவல் இணை ஆணையர் மற்றும் அடையாறு துணை ஆணையர் ஆய்வு செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.