நள்ளிரவில் பதற்றம்..! பெண் காவல் ஆய்வாளர் அதிமுக நிர்வாகி அதிரடி கைது..!
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பக்கத்து வீட்டு சிறுவன் உள்பட சிலர் மீது சிறுமியின் பெற்றோர் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது இந்த புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எங்களை தாக்குவதாகவும், குறிப்பாக சிறுவன் பெயரை நீக்க கூறி போலீசார் தாக்குவதாக பரபரப்பு வீடியோ ஒன்றை சிறுமியின் தாய் வெளியிட்டார். இந்த விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. மேலும் சிறுமியின் பெற்றோரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதித்த நீதிமன்றம், தமிழம் அல்லாத ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று அதிமுக 103 வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நபரை தப்பிக்க வைப்பதற்காக உதவி செய்தார் என்றும், மேலும் அடைக்களம் கொடுத்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. புகார் அளிக்க வந்தவரை தாக்கியதற்காகவும், புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்காததாலும் காவல் ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
தொடர்ந்து இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் வரும் 21 ஆம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் யார் யார் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறுமி வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கு நாளை 8ஆம் தேதி நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் சி குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.