மீண்டும் பதற்றம்..! அமெரிக்காவில் டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி!
அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்றபோது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது. இதனால், அப்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது, திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனை டிரம்ப் பிரசார அமைப்பின் செய்தி தொடர்பாளரான ஸ்டீவன் சீயங் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. எனினும், இந்த விவகாரத்தில் வேறு எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் வெளியிட்டு உள்ள எக்ஸ் ஊடக பதிவில், புளோரிடா பகுதிக்கு அருகே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவருடைய சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துப்பாக்கி சூடு நடந்தது என அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி ஜனாதிபதி பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு விரிவாக விளக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என அறிந்து இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த விசயங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த மத்திய சட்ட அமலாக்கப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. டிரம்ப் கோல்ப் விளையாடிய பகுதிக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் அதிபர் டிரம்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருகிறது. நான் கூறுவது போல் அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. டிரம்புக்கு தேவையான உரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.