நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாராவி மறு சீரமைப்புக்கான டெண்டர் ரத்து செய்யப்படும் - ஆதித்யா தாக்கரே அதிரடி!
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி தாராவி. இங்கு 100 சதுர அடிகள் கொண்ட சால் வீடுகளில் சுமார் ஆறு லட்சம் மக்கள் வரை நெருக்கடிகளுக்கு இடையே வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்னரே பிழைப்பு தேடி மும்பை சென்று தாராவியில் நிரந்தரமாக குடியேறியவர்கள்.
தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் முற்றிலும் அகற்றிவிட்டு மும்பையின் மற்ற நகரங்களுக்கு இணையாக அதனை மாற்ற தாராவி மறுசீரமைப்புத் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதானி குழுமம் சுமார் 5069 கோடி ரூபாய்க்கு தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தை டெண்டர் எடுத்துள்ளது.
இதற்காக மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து தாராவி மறுசீரமைப்பு திட்டம் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை அதானி குழுமம் ஆரம்பித்தது. தாராவியில் உள்ள குடிசைகளை ஒழித்துவிட்டு அங்கு வணிக வளாகம், அலுவலங்கள், விளையாட்டு அரங்குகள், மால்கள் உருவாக்கப்பட உள்ளன. ஏழு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாராவியில் உள்ளவர்களுக்கு வேறொரு பகுதியில் குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளன. அதாவது தாராவியில் 2000ம் ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதப்பட்டு 350 சதுர அடியில் இலவச குடியிருப்பு வழங்கப்பட உள்ளது. அதே சமயம் 2000 ஆண்டுக்குப் பிறகு குடியேறியவர்கள் தகுதியற்றவர்கள் என கருதப்பட்டு அவர்களுக்கு மலிவு விலை வாடகையில் வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிலையில் . தாராவியில் நடைபெற்ற மும்பையைக் காப்போம் என்ற பேரணி நடைபெற்றது. அதில் சிவசேனா ( தாக்கரே) பிரிவுதலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, “உங்கள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று மிரட்டி பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். ஆனால், உங்களுக்கு உரிமையான வீடுகளுக்காக போராட வேண்டிய நேரம் இது” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், “ஏக்நாத் ஷிண்டே அரசு தாராவி மக்களை வீடற்றவர்களாக ஆக்கியது. அவர்களின் நிலத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துவிட்டது. தாராவி மறு சீரமைப்புக்காக மும்பையில் உள்ள 1,062 ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதானிக்காக மகாராஷ்டிரா அரசு வேலை செய்கிறது” என்றும் குற்றம்சாட்டினார்.
தாராவி மக்களை உப்பு நிலங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். நான் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது மகாராஷ்டிரா விகாஸ் அகாதி ஆட்சிக்கு வந்தால், தற்போதுள்ள தாராவி மறு சீரமைப்புக்கான டெண்டர் ரத்து செய்யப்படும். தாராவி மக்களுக்கு அதே பகுதியில் 500 சதுர அடி வீடுகள் வழங்கப்படும். தாராவியை மாற்ற அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியளித்துள்ளார்.